ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

கோபம்..

காற்றாட்டு
வெள்ளத்தைப்போல
பெருகியோடும் கோபம்
சற்று நேரத்திற்கெல்லாம்
வடிந்து விடுவதாய்
தோன்றினாலும்
வற்றிய உப்பு நீரின்
படிவங்களை
உருவெடுக்கின்றன...

வியாழன், 2 ஏப்ரல், 2009

எதிரி..

முதுகுக்குப்பின்
வார்த்தைகளால் அடிக்கும்
உன்னை விடவும்
நேருக்கு நேராய்
பார்வையால் அறையும்
என் எதிரி மேலானவன்...

பகிர்வுகள்..


ரயிலைத்தவற
விட்ட
இரவொன்றில்தான்
எழுதப்பட்டது
உனக்கான
சில பகிர்வுகள்..

பிரிவு..

பிரிவுகள்தான்
எனதிருப்பினை
உனக்கு
எடுத்தியம்புமென
பிரிந்து போனேன்...

உணர்த்திவிட்டது
உன் அருகாமையை
எனக்கு...

முதன் முதலாய்...

முதன் முதலாய்
நாம் பயணித்த
ரயில் கடந்து போகிறது,,
இரைச்சலுடன்..

உள்ளுக்குள்
நிசப்தமாய்
நம் நெருக்கம்..

ஒருமுறை...

ஒருமுறை
விதைக்கப்படுவதில்லை...
நம்பிக்கை...
ஒவ்வொரு முறையும்
வளர்க்கப்படுவதே ....

ஒருமுறை
ஊற்றேடுப்பதல்ல
காதல்..
ஒவ்வொரு முறையும்
பிரவகிப்பதே...

ஊசலில்...

இரவுக்கும்
விடியலுக்குமான
இடைவெளியில்
தொலைகிறது
நம்பிக்கையின் கணம் ...

நிறைவிற்கும்
நிறைவின்மைக்கும்
இடையிலான ஊசலில்
அலைகிறது மனம்...

வேலியின்றியே..

உனது விரலின்
வெளிச்சத்தில்
என் வெட்கங்கள்
எல்லாம்
கண்ணாமூச்சி ஆடின..

வெட்கம் வடியத்
தொடங்கியதில்
மீறப்பட்ட
எல்லைகள்
வேலியின்றியே திரிகின்றன
இன்னமும்....

பயணியிடமாவது...

காற்றில்
விதைத்திருக்கிறேன்
உன் நினைவுகளை
நீயோ நானோ
இல்லாத போதுகளில் கூட
நம்மைப்பற்றி
பேசியபடியிருக்கும்
எந்த ஜன்னலோர
பயணியிடமாவது...

தாமதம்..

இத்துடன்
நிறுத்திக் கொள்ளலாம்..
என இருவரும்
முடிவெடுத்த பிறகான
நாட்கள்
எப்போதும் போல்
புலர்கின்றன..
என்றாலும்
எனது விடியல்
தாமதமாகிறது...

சனி, 28 மார்ச், 2009

காதல் ஒட்டு..

ஓட்டுப் போட்டு
முடிந்தபின்
என் கைவிரல் பிடித்து
மை வைக்கிறாய்...

வருங்காலத்தில்
யாரேனும்
'மை வைத்து
மயக்கி விட்டாய்'
என்பதற்கு
தோதாய்ப் போய் விட்டது...

காதல் உச்சம்...

*
புணர்தலின்
உச்சத்தில்
முனகுவதை
எண்ணுவதெல்லாம்
உன்னாலெழுந்த
கவிதையென
என்றாவது
உணர்ந்திருக்கிறாயா?

*
புத்தகம்
படிக்கும் நேரம்
உனக்காக
ஒதுக்கப்பட்டது..

பின்னர்
தெரிந்து கொண்டேன்..

புத்தகம் படிப்பதும்
உன்னிடம் பேசுவதும்
ஒன்றுதானென...

காத்தல் பரிசு..

*
உனக்கொரு
நாட்குறிப்பேட்டை
பரிசளிக்கிறேன்..

உன்
கையெழுத்தில்
அழாகாக வேண்டும்
ஒவ்வொரு நாளும்..

*
நெடுநேரம்
அளவளாவிவிட்டுத்
திரும்பிய பின்னும்
பேசியபடி..

நமது
காலடிச் சுவடுகள்..

காதல் கண்ணாடி..

*
கண்ணாடி
பற்றி
நீ சொன்ன
கவிதை பிம்பமாய்
என் கண்களில்...

கண்ணாடியோ
நீயோ
இல்லாத பொழுதுகளில்...

*
உனது
வார்த்தைக்
கண்ணாடியிலென்
முகம் பார்க்கிறேன்..

ரசம் தோய்ந்த
பொய்கள்
என் முகத்தஇப
பொலிவற்றுக் காட்டுகின்றன...

காதல் வலி...

ஏதாவதொரு
சூழலில்
உன் குழந்தைகளோடு
நீ எதிர்ப்படுகையில்
'அத்தைக்கு வணக்கம் சொல்லுங்க'
என்று காயப்படுத்தி விடாதே...

அதற்கு என்னை
கண்டுகொள்ளாமலேனும்
சென்று விடு..

இரண்டிலும்
வலி அதிகம்தான்...
முன்னது
உடனே உயிரைக்
கிழிக்கும்...
பின்னது
மெதுவாய் உயிரைக்
குடிக்கும் ....

காதல் சொற்கள்..

*
ஒன்றைக் குறிப்பதற்கு
நான்கைந்து
சொற்கள் தமிழில்
இருப்பது
எவ்வளவு வசதியாய்
போயிற்று...

'தாமரை' என்ற
எனது பெயரைக்
குறித்தே
உன்னிரு குழந்தைகளுக்கும்
கமல் , பத்மா
என்று பெயர் வைத்திருக்கிறாயே!

காதல் கவிதை...

*
கணினியோடு மட்டும்
பேசியபடியிருக்கும்
என்னை
கனவுகளோடும்
கவிதைகளோடும்
பேச வைத்து விட்டாய்..

கனவும்
கவிதையும்
கிடக்கட்டும்
நீயே வந்து விடேன்..

*
கடலில்
வழிதவறினால்
கலங்கரை விளக்கம்
கரையேற்றும்...

காதலில்
தவறினால்
எந்த விளக்கம்
என்ன செய்யும் ?

காதல் முத்தம்..

*
ஒரே ஒரு முத்தம்
கேட்டு
பெற முடியாமல்
திரும்புகிறாய்...

உன்
புகைப்படத்திற்கு
தெரியும் என்
முத்தங்களின்
எண்ணிக்கை...

*
தங்கம்
மாற்றுரு கொண்டால்
சேதாரம் ஆகும்..

நீ
மாற்றுடை தரிக்கிறாய்..
இலாபம்தானே
எஞ்சுகிறது...

காதல் தேவதை..

எனது
பலநூறு இரவுகளில்
ஒருநாள்
பட்டாம்பூச்சியோடு
படுத்துக் கிடந்தேன்..

இறக்கைகளுக்குள்
குளிர்காய்ந்தேன்
குழலுக்குள்
உளவு பார்த்தேன் ...

வயிற்றுக் கண்டங்களில்
உறங்கிப் போனேன்...
வண்ணங்களில்
வாசம் கற்றேன்...

பட்டாம்பூச்சியோடு
உறவாயிருந்த அந்த
இரவில்தான்
சாபம் நீங்கி
தேவதையானேன்...

வெள்ளி, 27 மார்ச், 2009

காதல் மத்தாப்பு..

*
ஒரு கம்பி
மத்தாப்பு
எரிந்து முடிய
41
விநாடிகள்தான் ....

எனக்குள்
உன்னலேற்பட்ட
நெருப்பு
எரிகிறது
யுகயுகமாய்...

*
பாறைகள்
உடைந்தும்
அழிந்தும்
போனால்
சிதைவுர்தலாம்...

என் மனம்
உன்னில்
புதையுண்டு போனதே
என்னவென்பாய்?..

காதல் அலை வரிசை.. ...

*
பொருத்தமான
பொய்கூடச்
சொல்லத் தெரியவில்லையென
வருத்தபடுகிறேன்

அலைவரிசையின்
தொடர்பு எல்லைக்கு
அப்பாலிருந்து
மீள்கையில்....

*
எங்கேயோ
எனக்குப் பிடித்தமான
வானொலி நிகழ்ச்சியைக்
கேட்டு உடனே
எனக்கு பேசி
அந்நிகழ்ச்சியை
கேட்கச் செய்கிறாய்...

எனக்குப் பிடித்தமான
நீ மட்டும்
எப்போதுமென்
அலைவரிசைக்குள்
வராமல் தப்பிக்கிறாய்.....

காதல் சதுரங்கம்..

*
காலம்
தன் சதுரங்கக் காய்களை
திட்டமின்றியே நகர்த்துகிறது...

யானையைப்போல்
நேர்க்கொட்டிலும்
தளபதிகளைப் போல்
குருக்குவாட்டிலும்
நகரும் தகுதி
ராணிக்கு இருப்பது போல்
ராஜாவுக்கு இருப்பதில்லை...

ஒவ்வொரு
கட்டமாகத்தான்
நகர முடிகிறது
சிப்பாய்களைப்போல்...

*
பார்த்தலிலோ
கேட்டலிலோ
உன் பெயர்
பதிவாக
இதயம் அதிர்வுறுகிறது..

ரிக்டர் அளவுகோலில்
சொல்வதனால்
எப்போதாவதுதான்
நிலநடுக்கம்
ஏற்படவேண்டும்...
எப்போதும் ஏற்பட்டால்...


காதல்..சிக்னல்..

*
சிக்னல் கிடைக்காமல்
ரயில் ஒரு
நிறுத்தத்தில் நின்ற பொது
எட்டிப்பார்த்தேன்
வெளியே
நீயும் கூட..

எனக்கு
சிக்னல் கிடைத்தது
அப்போதுதான்...

*

உணவுக்குழாயில்
செல்லும் உணவு
சில நேரங்களில்
காற்றுகுழாய்க்குள்
நுழைந்து விடுவதுண்டு....

புரையேறுகையில்
யாரோ நினைக்கிறார்களென
உன்னை
நினைவூட்டுகிறார்கள்
உடனிருப்பவர்கள்...

காதல் ... காதல்..ஒன்றே..

*

மெதுவாக
ஊர்ந்து செல்லும்
ரயிலாகத்தான்
உன் நினைவு
தொடங்கியது...


பின்
தடதடவென
விரையும் ரயிலாக
வேகமெடுத்து
இப்போதெல்லாம்
நிறுத்தமின்றியே
பயணிக்கிறது..


*
'புத்தகங்கள்
படித்தால்தான்
புதிய சிந்தனை
பிறக்கும் '
என்கிறேன் ...


'வா
படிக்க வேண்டும்
உன்னை'
என்கிறாய்.!


காதல் ...காதல் மட்டும்..

*காதலையே
செல்வதாகச் சிலர்
சலித்துக் கொள்கிறார்கள்..

எல்லோருக்கும்
தெரிந்த ஒன்றைச்
சொல்வதில்
தவறென்ன?..


* ஒவ்வொரு முறையும்
கோபத்தில்
உன்னோடு
பேசக்கூடாதென்றுதான்
நினைக்கிறேன்..

ஏனோ
உணதழைப்பு
வந்தவுடன்
தவறவிடாமல்
அனைத்துக் கொள்கிறேன்...