வெள்ளி, 17 அக்டோபர், 2008

காதலின் தன்மை

சிகப்பழகு சாதனம் பூசி தோல் வெளுத்த பெண்களிடம் மயங்குவதே காதல் என்று உலகமயமாதல் சிந்தனையை ஊடகங்கள் கூவிக் கொண்டிருக்கும் வேளையில், ‘என் காதலி தேவதை போன்றவள்’ என்று காதலி என்பவள் அழகானவளாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில், காதலைக் காதலாகவே பார்த்து, காதலின் தன்மையைக் கெடுக்காமல் காதலை அதன் உணர்வுபடவே கவிதையில் பதிவு செய்வதற்கு பாசாங்கற்ற நேர்மை வேண்டும்..

பசி கிள்ள / துடித்தழும் குழந்தையின் / குரல் / பொருள் / எவரெப்படி விளக்கியும் உணர முடியாது / தாயைப் போல / அப்படித்தான் / நம் காதலும்.இந்தக் கவிதையில் காதலை தாய்க்கும் குழந்தைக்குமான தொப்புள் கொடி உறவோடு சம்பந்தப்படுத்திப் பார்த்திருக்கிறார் இசாக். காதலை தெய்வீக உறவாகப் பார்த்தவர்கள் கூட குழந்தைக்கும் தாய்க்குமான தனிப்பட்ட உறவைப் போலக் கற்பனை செய்து பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். என்றாலும், காதலை அதனை உணர்ந்தவர்கள் மட்டுமே உணர முடியும் என்பதை மிக அழகாகச் சொல்ல இந்த உதாரணத்தை மிகத் திறமையாகவே கையாண்டிருக்கிறார் இசாக்.

காதல் கவிஞர்கள்

காதலை நகரத்துப் பார்வையிலேயே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஒருவகை. காதலியை அழகியல் ரீதியாகப் பாராட்டி ‘என் தேவதையே!’ என்று விளித்தே கவிதைத் தொகுப்பை நிரப்பும் காதல் கவிஞர்கள் மற்றொரு வகை. அதீத அழகிய தொகுப்பாக தங்கள் காதல் கவிதைகளைப் படைத்து இளம் காதலர்களைக் கவர்பவர்கள் இன்னொருவகை. இவர்களுக்கிடையில் காதலை மண்சார்ந்து பார்க்கும் கவிஞர்கள் மிக மிகக் குறைவு.நினைத்த நிமிடத்தில் மனசுக்குள் மகிழ்ச்சியை நிரப்பி நெகிழ்வூட்டுகிற உயிர் உணர்வு காதல்.அழகற்ற பெண்களை அழகாக்குவதற்காகவே வருகிறது காதல்

கவிதையே காதலாக..

கவிதை என்பது இதுதான் என்று எப்படி வரையறுக்கப்படவில்லையோ அதுபோலவே காதலும் வரையறுக்கப்படாமலேயே இருக்கிறது. அதனால் தானோ என்னவோ, காதலும் கவிதையும் பிணைந்தே வெளிவருவது போலத் தோன்றுகிறது.காதலே கவிதையாகவும், கவிதையே காதலாகவும் இணைந்திருப்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம்.

காதலைப் பற்றி கவிஞர்கள் பேசும்போது மட்டும் காதலுக்கு அலாதியான சுவை கூடிவிடுகிறது. கவிதை எப்படி உணர்வுகளின் வெளிப்பாடாக இருக்கிறதோ அதுபோலவே காதலும் உணர்வுகளின் வெளிப்பாடாக அமைகிறது. கவிதையில் வெளிப்படும் அனைத்து உணர்ச்சிகளுக்கும் காதலிலும் இடமுண்டு என்றாலும் காதலைச் சொல்லும் கவிதைகள் மென்மையான உணர்வுகளுக்கே முதலிடம் தருவதாய் அமைந்திருக்கின்றன.

காதல் - உணர்ச்சிகளின் பெருக்கு என்பவர்கள் இருக்கிறார்கள். காதல் உணர்வுபூர்வமானது என்பவர்கள் இன்னோர் வகை. காதல் பருவம் கொண்டு வந்து சேர்க்கும் நோய் என்பாரும் உண்டு. உடல் கவர்ச்சி என்பதை மறைப்பதற்காக பூசப்படும் முலாம்தான் காதல் என்றும் சொல்கிறார்கள். இப்படி ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் கதிரவன் அன்றாடம் உதிப்பது போல பருவம் வந்தவர்களுக்கிடையில் மறக்காமல் பூத்து விடுகிறது காதல்.