சனி, 28 மார்ச், 2009

காதல் ஒட்டு..

ஓட்டுப் போட்டு
முடிந்தபின்
என் கைவிரல் பிடித்து
மை வைக்கிறாய்...

வருங்காலத்தில்
யாரேனும்
'மை வைத்து
மயக்கி விட்டாய்'
என்பதற்கு
தோதாய்ப் போய் விட்டது...

காதல் உச்சம்...

*
புணர்தலின்
உச்சத்தில்
முனகுவதை
எண்ணுவதெல்லாம்
உன்னாலெழுந்த
கவிதையென
என்றாவது
உணர்ந்திருக்கிறாயா?

*
புத்தகம்
படிக்கும் நேரம்
உனக்காக
ஒதுக்கப்பட்டது..

பின்னர்
தெரிந்து கொண்டேன்..

புத்தகம் படிப்பதும்
உன்னிடம் பேசுவதும்
ஒன்றுதானென...

காத்தல் பரிசு..

*
உனக்கொரு
நாட்குறிப்பேட்டை
பரிசளிக்கிறேன்..

உன்
கையெழுத்தில்
அழாகாக வேண்டும்
ஒவ்வொரு நாளும்..

*
நெடுநேரம்
அளவளாவிவிட்டுத்
திரும்பிய பின்னும்
பேசியபடி..

நமது
காலடிச் சுவடுகள்..

காதல் கண்ணாடி..

*
கண்ணாடி
பற்றி
நீ சொன்ன
கவிதை பிம்பமாய்
என் கண்களில்...

கண்ணாடியோ
நீயோ
இல்லாத பொழுதுகளில்...

*
உனது
வார்த்தைக்
கண்ணாடியிலென்
முகம் பார்க்கிறேன்..

ரசம் தோய்ந்த
பொய்கள்
என் முகத்தஇப
பொலிவற்றுக் காட்டுகின்றன...

காதல் வலி...

ஏதாவதொரு
சூழலில்
உன் குழந்தைகளோடு
நீ எதிர்ப்படுகையில்
'அத்தைக்கு வணக்கம் சொல்லுங்க'
என்று காயப்படுத்தி விடாதே...

அதற்கு என்னை
கண்டுகொள்ளாமலேனும்
சென்று விடு..

இரண்டிலும்
வலி அதிகம்தான்...
முன்னது
உடனே உயிரைக்
கிழிக்கும்...
பின்னது
மெதுவாய் உயிரைக்
குடிக்கும் ....

காதல் சொற்கள்..

*
ஒன்றைக் குறிப்பதற்கு
நான்கைந்து
சொற்கள் தமிழில்
இருப்பது
எவ்வளவு வசதியாய்
போயிற்று...

'தாமரை' என்ற
எனது பெயரைக்
குறித்தே
உன்னிரு குழந்தைகளுக்கும்
கமல் , பத்மா
என்று பெயர் வைத்திருக்கிறாயே!

காதல் கவிதை...

*
கணினியோடு மட்டும்
பேசியபடியிருக்கும்
என்னை
கனவுகளோடும்
கவிதைகளோடும்
பேச வைத்து விட்டாய்..

கனவும்
கவிதையும்
கிடக்கட்டும்
நீயே வந்து விடேன்..

*
கடலில்
வழிதவறினால்
கலங்கரை விளக்கம்
கரையேற்றும்...

காதலில்
தவறினால்
எந்த விளக்கம்
என்ன செய்யும் ?

காதல் முத்தம்..

*
ஒரே ஒரு முத்தம்
கேட்டு
பெற முடியாமல்
திரும்புகிறாய்...

உன்
புகைப்படத்திற்கு
தெரியும் என்
முத்தங்களின்
எண்ணிக்கை...

*
தங்கம்
மாற்றுரு கொண்டால்
சேதாரம் ஆகும்..

நீ
மாற்றுடை தரிக்கிறாய்..
இலாபம்தானே
எஞ்சுகிறது...

காதல் தேவதை..

எனது
பலநூறு இரவுகளில்
ஒருநாள்
பட்டாம்பூச்சியோடு
படுத்துக் கிடந்தேன்..

இறக்கைகளுக்குள்
குளிர்காய்ந்தேன்
குழலுக்குள்
உளவு பார்த்தேன் ...

வயிற்றுக் கண்டங்களில்
உறங்கிப் போனேன்...
வண்ணங்களில்
வாசம் கற்றேன்...

பட்டாம்பூச்சியோடு
உறவாயிருந்த அந்த
இரவில்தான்
சாபம் நீங்கி
தேவதையானேன்...